திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 60 கிலோ கஞ்சா பொட்டலங்கள்; பைகளில் விட்டுச்சென்ற ஆசாமிகள் யார்?
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த 60 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவற்றை டிராலி மற்றும் பைகளில் விட்டு சென்ற ஆசாமிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த 60 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவற்றை டிராலி மற்றும் பைகளில் விட்டு சென்ற ஆசாமிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேட்பாரற்று கிடந்த பைகள்
ஊரடங்கு காரணமாக, ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. எனவே, பல எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் நேற்று காலை திருச்சி ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, ஜெயக்குமார், ஜவான் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே கேண்டீன் அருகே 2 டிராலி சூட்கேஸ் மற்றும் 2 பெரிய பைகள் கேட்பாரற்று கிடந்தது.
60 கிலோ கஞ்சா பறிமுதல்
அருகில் யாரும் இல்லாததால் உடனடியாக ரெயில்வே போலீசார் மோப்ப நாயை வரவழைத்து சோதனை செய்தனர். அப்போது அதில் 2 கிலோ வீதம் 30 பாக்கெட்டில் 60 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு ரெயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவற்றை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
கஞ்சா பொட்டலங்களை டிராலி சூட்கேஸ் மற்றும் பைகளில் கொண்டு வந்த மர்ம ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை. ரெயிலில் இருந்து இறங்கி செல்லும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா
அப்படி சோதனை செய்யும் வேளையில் எங்கே சிக்கி விடுவோமோ? என்ற அச்சத்தில் அவற்றை மர்ம ஆசாமிகள் தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் கஞ்சா கடத்தல் பேர்வழிகளை அடையாளம் காணும் வகையில் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ரெயில்வே போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணியிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story