உப்பிலியபுரம் அருகே துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதில் மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து 25 கிராமங்கள் இருளில் மூழ்கின
உப்பிலியபுரம் அருகே துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதில் மின்மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இதனால் 25 கிராமங்கள் இருளில் மூழ்கின.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் அருகே துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதில் மின்மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இதனால் 25 கிராமங்கள் இருளில் மூழ்கின.
துணை மின்நிலையம்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே கொப்பம்பட்டியில் துணை மின்நிலையம் உள்ளது. 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மின்நிலையம் 3 மின்மாற்றிகள் மூலம் 36 மெகாவாட் ஆம்பியர் திறனுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. மேலும் இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மின்னல் தாக்கியது
உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 10 மணி அளவில் திடீரென கொப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் உள்ள 10 மெகாவாட்ஸ் ஆம்பியர் திறன் கொண்ட மின்மாற்றியில் மின்னல் தாக்கியது.
இதனால் மின்மாற்றி தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் மின்மாற்றியில் இருந்த எண்ணெய் கொள்கலன் டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன்காரணமாக மின்மாற்றி திபு, திபு வென்று கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த தீவிபத்து காரணமாக சுமார் 25 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
6 மணி நேரம் போராட்டம்
மின்மாற்றியில் எரிந்த தீயை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாா்க்க முடிந்தது. இதற்கிடையே இந்த பயங்கர தீ விபத்து பற்றி தகவலறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விைரந்து வந்து தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பரவலை கட்டுப்படுத்த துறையூர், கெங்கவல்லி, பெரம்பலூர் மற்றும் திருச்சியிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
பின்னர் சுமார் 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் சேதமடைந்த மின்மாற்றியின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
இருளில் மூழ்கிய கிராமங்கள்
து.ரெங்கநாதபுரம் மற்றும் முருங்கப்பட்டி உதவி மின்நிலையங்களுக்கு மின் வினியோகம் செய்யும் மின்மாற்றியில் மின்னல் தாக்கி வெடித்ததால், சுமார் 25 கிராமங்கள் இருளில் மூழ்கின. இருப்பினும் உதவி மின்பொறியாளர் ஜேம்ஸ் மற்றும் ஊழியர்களின் கடின போராட்டத்திற்கு பின் தற்காலிகமாக மின் வினியோகம் சரி செய்யப்பட்டது.
இதனையடுத்து திருச்சி மேற்பார்வை பொறியாளர் ராஜகுணசீலன் தலைமையில் திருச்சி மற்றும் காரைக்குடியிலிருந்து புனரமைப்பு குழுவினர் வரவழைக்கப் பட்டு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் வளர்மதி சம்பவ இடத்தில் சேத விபரங்களை நேரில் ஆய்வு செய்து, புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
Related Tags :
Next Story