வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி மாவட்டத்தில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடந்தது.
திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் அண்ணாமலை நகர் அருகே நடந்த இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் இடுப்பில் இலைதழைகளை கட்டிக்கொண்டு மண்டை ஓடுகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி மற்றும் உறையூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தள்ளு-முள்ளு
இதையடுத்து வேளாண் சட்ட நகலை விவசாயிகள் எரிக்க முயன்றனர். உடனே அதனை போலீசார் விவசாயிகளிடம் இருந்து பறித்ததால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
பின்னர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தீ வைத்து எரிப்பு
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அயிலாபேட்டை காமராஜர் நினைவு வளைவு பகுதியில் அகில இந்திய விவசாயிகள்போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக நேற்று காலை அயிலை சிவசூரியன் தலைமையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின்போது மத்திய அரசு க்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், வேளாண் சட்ட நகலை தீ வைத்து எரித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஜீயபுரம் போலீசார் அவற்றை பறித்து தண்ணீரை ஊற்றி சட்ட நகலை அணைத்தனர்.
ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் துணைத்தலைவர் முத்துக்குமார் தலைமையில் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் புதிய வேளாண் சட்டத்தின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதுபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மணப்பாறை நகரகுழு சார்பாக நகர நிர்வாக குழு உறுப்பினர் இளையராஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story