தோகைமலை, லாலாபேட்டை பகுதிகளில் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 10 பேர் கைது


தோகைமலை, லாலாபேட்டை பகுதிகளில் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 10 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2021 12:28 AM IST (Updated: 6 Jun 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை, லாலாபேட்டை பகுதிகளில் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தோகைமலை
கோவில்களில் தொடர் திருட்டு
தோகைமலை பகுதியில் உள்ள 6 கோவில்களில் கடந்த 3 மாதங்களாக உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டு வந்தது. குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமேஸ்வரன், முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, திருடர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று தனிப்படை போலீசார் தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
5 பேர் கைது
அப்போது கள்ளை காளியம்மன் கோவில் அருகே உள்ள நாடக மேடையில் 5 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமர்ந்து இருந்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் பிடித்து சென்று தோகைமலை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நங்கவரம் பகுதியை சேர்ந்த சொட்டல் பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் மணிவாசகம் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த கொத்தனார்கள் குமார் (21), அய்யப்பன் (23), கார்த்திக் (27), புலியூரை சேர்ந்த ஏசி மெக்கானிக் தினேஷ் (24) என்பதும், இவர்கள் 5 பேரும் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல், தோகைமலை பகுதியில் வடசேரி, எரிச்சலூர், கழுகூர், வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 4 கோவில்களில் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை
கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக லாலாபேட்டை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் நச்சலூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (25) லட்சுமணன் (23), சூரியபிரகாஷ் (22), விஸ்வா (19), சேட்டு (25) ஆகிய 5 பேர் என்பதும், இவர்கள் ஒன்று சேர்ந்து லாலாபேட்டை அருகே உள்ள முத்தம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில், வெள்ளைய கவுண்டன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் லாலாபேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story