2-வது நாளாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை
தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
2-வது நாளாக மழை
தஞ்சை மாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் அதிகஅளவில் காணப்பட்டது. வெப்பத்தின் தாக்கம் இரவிலும் எதிரொலித்தது. மின்விசிறிக்கு கீழே அமர்ந்து இருந்தாலும் வெப்பக்காற்று தான் வீசியது. இந்தநிலையில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி 2-வது நாளாக நேற்றுஇரவு தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தஞ்சையில் பகலில் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இரவு 7.30 மணி அளவில் மழை பெய்தது. இந்த மழை 20 நிமிடம் நீடித்தது. இதேபோல் திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.இதனால் .தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வல்லம்
தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளிலும், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களிலும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மேலும் வல்லம் -திருச்சி சாலையில் மழையால் கூரைகள், பதாகைகள் சாய்ந்தன.
மழைஅளவு
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஆழ்குழாய் கிணறு மூலம் கோடைநெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை தொடங்கி உள்ளனர். அப்படி ஒரு சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள கோடைநெல் இந்த மழையினால் சாய்ந்தது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
அய்யம்பேட்டை-17, திருவையாறு-11, பாபநாசம்-9, பேராவூரணி-2, வல்லம்-3, தஞ்சை-1, திருக்காட்டுப்பள்ளி-1.
Related Tags :
Next Story