மின்வாரிய ஒப்பந்ததாரர் வீட்டில் தங்க நாணயங்கள்- வெள்ளி பொருட்கள் திருட்டு


மின்வாரிய ஒப்பந்ததாரர் வீட்டில் தங்க நாணயங்கள்- வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 6 Jun 2021 1:49 AM IST (Updated: 6 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பட்டப்பகலில் மின்வாரிய ஒந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:

மின்வாரிய ஒப்பந்ததாரர்
தர்மபுரியை சேர்ந்தவர் ராஜ்மோகன்(வயது 42). இவர் பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள கிரீன் சிட்டியில் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, தற்போது மின் வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார்.
இவரது மனைவி கயல்விழி, வாழப்பாடியில் தமிழ்நாடு வனத்துறையில் காப்பாளராக உள்ளார். இதனால் கயல்விழி தனது குழந்தையுடன் வாழப்பாடியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
திருட்டு
இந்தநிலையில் ராஜ்மோகன் தினமும் வீட்டை பூட்டிவிட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். நேற்று ராஜ்மோகன் தனது வீட்டை பூட்டி விட்டு வங்கிக்கு சென்று விட்டார்.பின்னர் மீண்டும் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த அரை பவுன் தங்க நாணயங்கள் 3, வெள்ளிக்கொலுசு 3 ஜோடி வெள்ளியினாலான தட்டு, குங்கும சிமிழ், விளக்கு, அரைஞாண் கொடி ஆகியவற்றையும், சாமி அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சாமி காசு ரூ.3 ஆயிரத்தையும் திருடிச்சென்று இருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு குறித்து ராஜ்மோகன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார், ராஜ்மோகன் வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story