‘லிப்ட்’ கேட்டு லாரியில் சென்று, டிரைவர் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறி; சிறுவன் உள்பட 2 பேர் கைது
தா.பழூர் அருகே ‘லிப்ட்’ கேட்டு லாரியில் சென்று டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பழூர்:
நெல் மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் அருள்ராஜ்(வயது 27). லாரி டிரைவர். இவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாளுக்கு நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி வந்தார்.
நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஜெயங்கொண்டம்- தா.பழூர் சாலையில் கழுவந்தொண்டி அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு அருகில் அந்த லாரி வந்தபோது, 2 பேர் லாரியை மறித்து கும்பகோணம் செல்வதற்கு ‘லிப்ட்’ கேட்டுள்ளனர். டிரைவர் அருள்ராஜ் மனமிறங்கி, அவர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
கழுத்தில் கத்தியை வைத்து...
அணைக்குடம் கிராமம் அருகே லாரி வந்தபோது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக லாரியை நிறுத்தும்படி கேட்டுள்ளனர். அதற்கு அருள்ராஜ், வழியில் எங்காவது டீ இருந்தால் அங்கே நிறுத்துவோம் என்று கூறியுள்ளார். ஆனால் அவசரமாக இயற்கை உபாதை கழிக்க வேண்டும், உடனடியாக லாரியை நிறுத்துங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்குள் லாரி 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து கோடங்குடி - சிந்தாமணி கிராமங்களுக்கு இடையே வந்தது. அங்கு அருள்ராஜ் சாலை ஓரமாக லாரியை நிறுத்தி, அவர்களை இறக்கிவிட முயன்றுள்ளார். அப்போது அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை, அருள்ராஜின் கழுத்தில் வைத்து பணம், செல்போன் போன்றவற்றை கேட்டு மிரட்டியுள்ளனர்.
2 போ் கைது
இதையடுத்து அருள்ராஜ் செல்போனையும், தனது சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.300-ஐயும் அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் லாரியில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது அருள்ராஜ், அருகில் இருந்த வீடுகளுக்கு ஓடிச்சென்று அங்கிருந்தவர்களிடம் தன் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறி செய்தது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிய திசையில் தேடிச்சென்றனர். அப்போது சிந்தாமணிக்கும், கோடங்குடிக்கும் இடையில் உள்ள ஒரு கடையின் பின்புறம் அவர்கள் 2 பேரும் பதுங்கி இருந்தனர்.
இதுபற்றி உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பதுங்கி இருந்த 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், ஜெயங்கொண்டம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராசுவின் மகன் தமிழ்ச்செல்வன் (20), மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ‘லிப்ட்’ கேட்டு லாரியில் சென்றவர்கள் டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story