ஊரடங்கில் பிடிபட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி


ஊரடங்கில் பிடிபட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி
x
தினத்தந்தி 6 Jun 2021 1:53 AM IST (Updated: 6 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கில் பிடிபட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி நேற்று தொடங்கியது.

திண்டுக்கல்: 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைகள், முக்கிய பகுதிகள் என 48 இடங்களில் தினமும் வாகன சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் வாகனங்கள் பிடிபட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. 

இதைத் தொடர்ந்து ஊரடங்கில் பிடிபட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதை அறிந்ததும் வாகனங்களின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு படையெடுத்தனர்.

 இதில் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 

அதன்பின்னர் போலீசார் உரிய ஆவணங்களை சரிபார்த்து வாகனங்களை ஒப்படைத்தனர். 

Next Story