பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்


பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்
x
தினத்தந்தி 5 Jun 2021 8:27 PM GMT (Updated: 5 Jun 2021 8:27 PM GMT)

குமரி மாவட்ட பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து மொத்தம் 4,244 கனஅடி உபரி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்ட பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து மொத்தம் 4,244 கனஅடி உபரி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. 
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
குமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. மலையோர பகுதிகளிலும் அணைப்பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளவை எட்டும் நிலையில் இருந்து வருகிறது. இதனால், அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. 
இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று முன் தினம் மதியம் கன்னிப்பூ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மழை பெய்து வருவதாலும் ஆறுகள், வாய்க்கால்களில் நீர் வரத்து அதிகமாக இருந்ததாலும் முதலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட 500 கனஅடி தண்ணீர் சில மணி நேரங்களில் 200 கனஅடியாக குறைக்கப்பட்டது. பின்னர் இரவு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு அணை மூடப்பட்டது.
உபரி நீர் வெளியேற்றம்
ஆனால் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் மட்டும் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 761 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 2,263 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 836 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 1,981 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 4,244 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 16.30 அடியாகவும், சிற்றார்- 2 அணையின் நீர்மட்டம் 16.40 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 26.70 அடியாகவும் உள்ளன. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 54.12 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 62 கன அடி தண்ணீர் அப்படியே வழியாக வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 25 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 12 கனஅடி தண்ணீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
அணைகள் கண்காணிப்பு
தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் அணைகளின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக குழித்துறை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்காடு பகுதியில் பாலத்தை தொட்ட நிலையில் வெள்ளம் பாய்கிறது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே அறிவிப்பு கொடுத்துள்ளனர். கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை அணை பகுதியில் 11 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதியில் 13.2 மி.மீ., சிற்றார்-1 அணைப்பகுதியில் 9 மி.மீ., பாலமோர் பகுதியில் 3.6 மி.மீ. மழையும் பெய்தது.
மேலும் 32 வீடுகள் இடிந்தன
கடந்த மாதம் கொட்டி தீர்த்த கன மழைக்கு மாவட்டம் முழுவதும் 451 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 11 வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் நேற்று முன்தினம் 32 வீடுகள் இடிந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 17 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 11 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 4 வீடுகளும் என மொத்தம் 32 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

Next Story