டெல்டா பாசனத்துக்காக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆயத்த பணிகள் தொடக்கம்
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
டெல்டா பாசனம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகை ஆகிய 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
12-ந்தேதி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இந்த ஆண்டு போதுமான தண்ணீர் இருப்பதால், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.
இதையொட்டி அணையில் தண்ணீர் திறப்பதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடங்கி உள்ளனர். அணையின் மேல்மட்ட மதகுகள் உள்பட மதகுகளின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அணையின் பவள விழா கோபுரம் செல்லும் பாதையில் சாலையின் ஓரங்களில் உள்ள முட்புதரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மதகுகளின் இயக்கம் குறித்தும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகள் மகிழ்ச்சி
அணையின் வரலாற்றில் இதுவரை 17 முறை குறிப்பிட்ட காலத்தில், அதாவது ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 18-வது முறையாக தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏற்கனவே ஜூன் 12-ந் தேதி முன்பாக 10 முறையும், ஜூன் 12-ந் தேதி பிறகு 60 முறையும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் விவசாய பணிகளை தற்போதே தொடங்கி உள்ளனர். டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் போது ஒரு நாளைக்கு குறைந்தது வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் கடைமடை வரை செல்லும். சராசரியாக 1 முதல் 1¾ டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்து விட்டால் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். அதன் பின்னர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் குறுவை சாகுபடி வெற்றிக்கரமாக அமைந்தது. அதே நிலை இந்த ஆண்டும் தொடருமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story