கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை-சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் எச்சரிக்கை
கொரோனா நோயாளி களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சேலம்:
கொரோனா நோயாளி களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆஸ்பத்திரியில் ஆய்வு
சேலம் அரசு ஆஸ்பத்திரி யில் நேற்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் கார்மேகம், மருத்துவ துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நோய் பரவல் குறைந்துள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தி அறிகுறி உள்ளவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பவும், அதேசமயம் லேசான அறிகுறி உள்ளவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தும் பணியும் நடக்கிறது.
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்துள்ளது. அதேசமயம் 10 முதல் 15 மாவட்டங்களில் கொரோனா இன்னும் குறையவில்லை. ஒரே நிலையில்தான் உள்ளது. அந்த மாவட்டங்களிலும் விரைவில் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
தமிழக அளவில் படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அப்போது தான் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். 2-வது அலையால் மிக அதிகமாக ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்பட்டது. மே முதல் 2 வாரத்தில் பெரும் சவாலாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது நீங்கி உள்ளது.
கூடுதல் கட்டணம் வசூல்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் மட்டுமே நோயாளிகளிடம் வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் கூடுதலாக வாங்கும் பணத்தை மருத்துவமனையிடம் இருந்து நோயாளிகளின் உறவினர்களுக்கு திருப்பி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகள் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். இது பணம் சம்பாதிக்கக்கூடிய தருணம் இல்லை. எனவே கொரோனா சிகிச்சைக்கு நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 95.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. இந்த மாதத்தில் சுமார் 45 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்க தடுப்பூசி மிகவும் அவசியமானது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் 843 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்கனவே 835 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. அது தற்போது 1,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஒத்துழைப்பு அவசியம்
சேலம் மாவட்டத்தில் படிப்படியாக நோய் தொற்று குறையும் என நம்பிக்கை இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளது. அதனால் அனைவரும் கவனமாக இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த ஆய்வின்போது சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் செல்வகுமார் (ஆத்தூர்), முருகேசன் (சேலம்) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story