நீலகிரி மாவட்டத்துக்கு வர நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்
வெளியூர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர நாளை முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
வெளியூர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர நாளை முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தினமும் 500 பேருக்கும் மேல் உறுதியாகி வருகிறது. இதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும், நீலகிரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாயம் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்கு தொழிலாளர்கள் சென்று வருவதுதான் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சில தளர்வுகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மாலை 5 மணி வரை
அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் தனியாக செயல்படும் மளிகை, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதற்கிடையில் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு நடைமுறை அமலில் இருந்தது. இதன் மூலம் பலர் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து உடனுக்குடன் வந்தனர்.
பலர் தவறாக பயன்படுத்தி வந்ததால் தொற்று பரவும் அபாயம் இருந்தது. கொரோனா பரவலை தடுக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முதல்- அமைச்சரிடம் இ-பாஸ் நடைமுறைபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இ-பாஸ் நடைமுறை
அதற்கு அனுமதித்ததால் நாளை முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு அவசர காரணங்களுக்காக வருகிறவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதை பெற அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற காரணங்களுக்கு மட்டும் வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சரியான ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும். அனுமதி பெறாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story