இதுவரை 97,723 பேர் குணமடைந்தனர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது - ஒரே நாளில் 525 பேர் பாதிப்பு


இதுவரை 97,723 பேர் குணமடைந்தனர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது - ஒரே நாளில் 525 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 6:03 AM IST (Updated: 6 Jun 2021 6:03 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிர கட்டுப்பாடு நடவடிக்கையால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக கிடுகிடுகென உயர்ந்து வந்தது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி சென்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கி தீவிர தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது.

அதன் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பினபற்றுவது உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டன.

அதன்பலனாக தற்போது கொரோனா சமீப காலமாக கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. அதையொட்டி கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தற்போது தொற்று மேலும் குறைந்து 500-க்கும் கீழ் குறைய தயாராக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 525 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 97 ஆயிரத்து 723 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

5 ஆயிரத்து 303 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,489 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 பேர் இறந்து உள்ளனர்.

Next Story