செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம்


செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 6 Jun 2021 3:43 PM IST (Updated: 6 Jun 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

செயற்கையாக கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுவதால் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி,

மா, பலா, வாழை என முக்கனிகளில் முதலிடம் பிடிப்பது மாம்பழம். சுவையால் மட்டுமல்ல மணம் பரப்பியே மக்களின் மனதையும் கவர்ந்து இழுப்பதால் மாம்பழத்துக்கு தனி மவுசு உண்டு. மாம்பழங்களில் இனிப்பு சுவையுடன், நமக்கு சுகம் அளிக்கும் மருத்துவ குணங்களும் அதிகம்.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் புதுச்சேரி கடைகளை மாம்பழங்கள் ஆக்கிரமித்துள்ளன. மறைமலை அடிகள் சாலை, நேருவீதி, கடலூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாம்பழங்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. சாலையோரங்களில் குவித்து போட்டும் விற்கப்படுகின்றன.

ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்கப்படுவதால் மறைமுகமாக ஆபத்தையும் பரப்புகின்றனர். இந்த மாம்பழங்களை சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

மாம்பழங்கள் மட்டுமின்றி வாழைப்பழங்களையும் ரசாயன ஸ்பிரே அடித்து பழுக்க வைக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், ரகசியமாக செயற்கை முறையில் இப்படி பழுக்க வைக்கப்படும் பழங்களை வாங்கி சாப்பிடுவதால் மக்களின் நலம் பாழாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பழங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story