ஊரடங்கு தளர்வில் மதுக்கடைகள் திறக்கப்படுமா? மது பிரியர்கள் எதிர்பார்ப்பு
ஊரடங்கு தளர்வில் மதுக்கடைகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மது பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கினால் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் மது, சாராயக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இதே நிலைமைதான் நீடித்து வருகிறது. மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் மது பிரியர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். போதைக்காக திருட்டுத்தனமாக விற்கப்படும் மதுபானங்கள், வேறு சில போதை வஸ்துகளையும் பயன் படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களது உடல் நலனுக்கு கேடு ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தற்போதைய ஊரடங்கு உத்தரவு நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. அடுத்து ஒருவாரம் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த தளர்வில் மதுக்கடைகள் திறக்கப்படுமா? என்று மதுபிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். எங்காவது மது கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் மதுக்கடைகளை சுற்றிச்சுற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதுபோன்ற நிலை புதுவையிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மதுபிரியர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story