கூலித்தொழிலாளி அடித்து கொலை மகன்கள் வெறிச்செயல்
பட்டிவீரன்பட்டி அருகே தாயை கத்தியால் குத்திய தந்தையை, மகன்கள் அடித்து கொன்றனர்.
பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள செங்கட்டான்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் (வயது 51). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கிடையே நேற்று தகராறு ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரம் அடைந்த வனராஜ் தான் வைத்திருந்த கத்தியால் ஈஸ்வரியை குத்தினார். இதில் ஈஸ்வரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் வலியால் அலறித்துடித்தார்.
இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த மகன்கள் முத்துசாமி (29), ஊர்காலன் (24) ஆகியோர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும், தாயை ஏன் கத்தியால் குத்தினீர்கள்? என்று தந்தை வனராஜிடம் கேட்டு தகராறு செய்தனர்.
அடித்து கொலை
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துசாமியும், ஊர்காலனும் சேர்ந்து அங்கிருந்த உருட்டுக்கட்டையால் வனராஜின் தலையில் பலமாக தாக்கினர்.
இதில் வனராஜ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே வனராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதனிடையே வனராஜ் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஈஸ்வரி வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமி, ஊர்காலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story