வேலூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


வேலூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 6 Jun 2021 7:25 PM IST (Updated: 6 Jun 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

வேலூர்

இடி, மின்னலுடன் பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்தது. கடந்த சில நாட்களாக சராசரியாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் அளவு பதிவானது. இந்த நிலையில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக சில மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் இடைவெளி விட்டு பரவலாக மழை பெய்தது. இவ்வாறாக இரவு 11 மணி வரை மழை நீடித்தது.

அதேபோன்று காட்பாடி, அடுக்கம்பாறை, அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. வேலூர் நகரில் கொட்டி தீர்த்த மழையால் கொணவட்டம், சேண்பாக்கம், சம்பத்நகர், கன்சால்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வீட்டிற்குள் தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டே இருந்ததால் விடிய, விடிய பொதுமக்கள் தூங்காமல் விழித்திருந்தனர்.

மழைநீர் வெளியேற்றம்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன்பேரில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று மின்மோட்டார் மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வாகனம் மூலம் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர். மேலும் அங்குள்ள கால்வாய் அடைப்புகளையும் சரி செய்தனர். பின்னர் பிளிச்சிங் பவுடர் தூவி சுகாதார பணிகள் மேற்கொண்டனர்.

இதேபோன்று வேலூர் மாங்காய் மண்டி, கோட்டை நுழைவு வாயில், நேதாஜி விளையாட்டு மைதானம், கிரீன்சர்க்கிள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. 

Next Story