திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஏராளமானோர் போட்டுக்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்று பயந்த பொதுமக்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதன் பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சி மூலம் அறிந்ததும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு சிகிச்சை மையங்களில் குவிந்தனர்.
தட்டுப்பாடு
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்களும் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் மாவட்ட தேவையை பொறுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் குவியத்தொடங்கினர்.
அதன்படி நேற்று திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, முத்தழகுபட்டி தேவாலயம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மாவட்டத்தில் நேற்று மட்டும் 667 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஏராளமானோர் போட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story