10 சதவீத தொழிலாளர்களுக்கு மேல் இயங்கும் நிறுவனங்களுக்கு சீல்


10 சதவீத தொழிலாளர்களுக்கு மேல் இயங்கும் நிறுவனங்களுக்கு சீல்
x
தினத்தந்தி 6 Jun 2021 9:35 PM IST (Updated: 6 Jun 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் 10 சதவீத தொழிலாளர்களுக்கு மேல் இயங்கும் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்
திருப்பூரில் 10 சதவீத தொழிலாளர்களுக்கு மேல் இயங்கும் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கில் தளர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டு வருகிறது. முதலில் தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்தது. திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து திருப்பூரில் அதிகரித்து வந்ததால் பனியன் நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இதில் கொரோனா பாதிப்பு அதிகம் மற்றும் குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு சில கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
அதன்படி கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கான ஆணை இருந்தால், ஏற்றுமதிக்கான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவீத தொழிலாளர்களுடன் அரசு வழிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இயங்க உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தொழில்துறையினருடனான ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது.
இதில் மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவ் கிருஷ்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்பட வடக்கு தலைமையிடத்து தாசில்தார் சரவணன் உள்பட அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர். அப்போது அரசு வழிமுறைகளை பின்பற்றி ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க வேண்டும். 10 சதவீத தொழிலாளர்களுக்கு மேல் நிறுவனங்கள் இயங்கினால் ‘சீல்’ வைக்கப்படும். இதுபோல் நிறுவனங்களில் முககவசம் தொழிலாளர்கள் கட்டாயம் அணிய வேண்டும். தினமும் அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி மூலம் தொழிலாளர்கள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Next Story