அழிந்து வரும் இயற்கையை காப்பாற்ற அதிகளவு மரங்களை நடவு செய்ய வேண்டும்


அழிந்து வரும் இயற்கையை காப்பாற்ற அதிகளவு மரங்களை நடவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 Jun 2021 9:48 PM IST (Updated: 6 Jun 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

அழிந்து வருகின்ற இயற்கையையும் உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு அதிகளவு மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும்.

தளி
அழிந்து வருகின்ற இயற்கையையும் உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு அதிகளவு மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும்.
இயற்கையின் மகத்துவம்
ஓரறிவு கொண்ட புல், பூடு, செடி, கொடி, மரம் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான், அட்டை. நான்கறிவு கொண்ட நண்டு, தும்பி, வண்டு ஐந்தறிவு படைத்த விலங்கு, பறவை போன்றவைகள் நிறைந்த இயற்கையை பராமரித்து பாதுகாக்கும் ஆற்றல் மிகுந்த வேலைக்காரர்களாக ஆறறிவு கொண்ட மனிதனை இறைவன் படைத்துள்ளார். இயற்கை வளத்தை முழுமையான உயிர்ப்போடு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே நமது வேலை. 
அதை உணர்ந்த நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து அனைத்து உயிரினங்களையும் அரவணைத்துச் சென்றனர். ஒவ்வொன்றின் மகத்துவத்தையும் உணர்ந்து அதன் இனப்பரவலையும் அதிகரித்து வந்தனர்.
அரசமரத்தின் பலன்
அதில் மரங்களின் அரசனான அரசமரம் முக்கியத்துவம் பெறுகிறது. அரசமரம் உணர்வுப்பூர்வமும் புத்திசாலித்தனமும் மிகுந்தது. அதைச் சுற்றி வந்தால் அறிவு வளரும். மரத்தின் அடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அரசமரத்தின் கீழ்ப்பகுதியில் பிரம்மாவும் நடுப்பகுதியில் விஷ்ணுவும் மேல்பகுதியில் சிவனும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகிறது.
மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் அபரிதமான ஆக்சிஜனை உற்பத்தி செய்து உயிரினங்களுக்கு அளித்து வருகிறது.ஓரு மரம் நாளொன்றுக்கு 1800 கிலோ கரியமிலவாயுவை எடுத்துக்கொண்டு 2400 கிலோ ஆக்சிஜனை அனைத்து உயிரினங்களுக்கும் சமமாக வழங்கி தன்னலம் கருதாது சேவை புரிந்து வருவது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. 
பறவைகளால் விதை பரவல்
நமக்கு அரசமரத்தின் விதைகள் தேவை என்றால் தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டின் காலி இடத்தில் பறவைகளுக்கு தினந்தோறும் உணவு தண்ணீர் கொடுத்து வந்தாலே போதும். அவை எச்சத்தின் மூலமாக மருத்துவ குணம் கொண்ட ஆலமரம், அரசமரம், வேப்ப மரத்தின் விதைகளை தூவி விட்டு சென்றுவிடும்.
அது முளைத்து வளர்ந்த பின்பு எடுத்து நடவு செய்து பராமரித்து வந்தால் போதும் இயற்கையையும் உயிரினங்களையும் அழியாமல் பாதுகாக்கலாம்.
மரங்களின் அழிவு
ஆனால் கடந்த சில வருடங்களாக சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.அவற்றை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்வதற்கோ அல்லது புதிதாக மரங்களை நடவு செய்வதற்கோ யாரும் முன் வருவதில்லை. இதனால் பூமி வெப்பம் அடைந்துள்ளதுடன் காற்று மாசும் ஏற்பட்டு ஆஸ்துமா, சளி, கண்எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் கோளாறுகளை சந்தித்து வருகின்றோம். அதுமட்டுமின்றி ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து இயற்கையை அழித்ததின் பலனை கொரோனா இன்று ஆக்சிஜன் பற்றாக்குறை மூலமாக நமக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்தி உள்ளது. நமது சுயநலத்தால் இயற்கை படைத்த ஆக்சிஜனை வலுக்கட்டாயமாக அழித்து விட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம்.
எச்சரிக்கை மணி
உயிரைக் காப்பற்றுவதற்காக செயற்கை ஆக்சிஜனை தேடியும் அழைந்து கொண்டுள்ளோம்.ஆனாலும் பற்றாக்குறை காரணமாக விலைமதிப்பற்ற ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியாமல் இழந்து வருகின்றோம்.இது இயற்கை நமக்கு அடித்த மாபெரும் எச்சரிக்கை மணியாகும்.இனிமேலும் நாம் இயற்கையோடு இணைந்து பயணிக்க வில்லை என்றால் இதுபோன்றதொரு மற்றொரு பேரழிவை சந்திக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
எனவே இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து இயற்கை வளங்களையும், மரங்களையும் அழிக்காமல் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் நடவு செய்து இயற்கையையும் சுற்றுப்புற சுகாதாரத்தையும் பாதுகாப்பதற்கு முன்வருவதுடன் அனைத்து உயிர்களையும் நேசிப்பதற்கு முன்வர வேண்டும்.
இயற்கையை காப்போம்
விதைப்பந்துகள் மூலமாக வாகை, புங்கன், புளியமரம் உள்ளிட்ட மரங்களின் விதைகளோடு சேர்த்து அபரிதமான ஆக்சிஜனை தரக்கூடிய அரசமரம், நீண்ட ஆயுளோடு நிலைத்து நின்று இயற்கையை பாதுகாக்கும் ஆலமரம், காற்றைச்சுத்திகரிக்கும் வேப்பமரத்தின் விதைகளையும் சேர்த்து தூவுவதற்கு முன்வர வேண்டும்.மருத்துவ குணங்களை கொண்ட மரங்கள், மூலிகைகளை நடவு செய்து இயற்கையை காப்பாற்றுவதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Next Story