திருச்சி அருகே மகள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை முயற்சி; மற்றொரு மகள் உயிர் ஊசல்


திருச்சி அருகே  மகள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை முயற்சி; மற்றொரு மகள் உயிர் ஊசல்
x
தினத்தந்தி 6 Jun 2021 9:53 PM IST (Updated: 6 Jun 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மகள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் மற்றொரு மகளும், தாயும் உயிருக்கு போராடி வருகிறாரகள்.


திருவெறும்பூர்,

திருச்சி அருகே மகள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் மற்றொரு மகளும், தாயும் உயிருக்கு போராடி வருகிறாரகள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- 

அமரர் ஊர்தி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அமரர் ஊர்தி வைத்து வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்ராதேவி(வயது 40). இவர்களுக்கு தனலட்சுமி(19), திவ்யா(16) ஆகிய மகள்களும், விக்னேஷ்வரன்(13) என்ற மகனும் உள்ளனர். 

இதில் தனலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். பட்டபடிப்பு படித்து வருகிறார். துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் திவ்யா பிளஸ்-1 வகுப்பும், விக்னேஸ்வரன் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

2 மகள்கள், மகனுடன் விஷம் குடித்த தாய் 

கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் அனைவரும் மனமுடைந்து இருந்தனர். இதனால் சித்ராதேவி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். 

அதன்படி, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்ராதேவி அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்ததுடன், தனது 2 மகள், மகனுக்கும் கொடுத்தார். அவர்களும் அதை குடித்துள்ளனர். இதில் 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

அக்காள்-தம்பி சாவு

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அக்காள், தம்பியான திவ்யாவும், விக்னேஸ்வரனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். சித்ராதேவியும், அவருடைய மூத்த மகள் தனலட்சுமியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

விசாரணை

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் திவ்யா மற்றும் விக்னேஸ்வரனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story