கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து தட்டுப்பாடு நீங்கியது சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு நீங்கியது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு,
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று பெங்களூரு சி.வி.ராமன் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு நீங்கியது. 15 நாட்களுக்கு முன்பு இருந்த பற்றாக்குறை தற்போது இல்லை. அந்த மருந்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த நோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். இஷ்டம் போல் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க முடியாது. சி.எஸ்.ஆர். நிதி மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஐ.சி.யு. வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சி.வி.ராமன் நகர் ஆஸ்பத்திரியில் 77 படுக்கைகளுடன் ஐ.சி.யு. அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆக்சிஜன் படுக்கைகளும் நிறுவப்பட்டுள்ளன. ஐ.சி.யு., ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை குறைந்தாலும், அந்த வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story