அரக்கோணத்தில் பயங்கரம் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை


அரக்கோணத்தில் பயங்கரம் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2021 10:17 PM IST (Updated: 6 Jun 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர், வீடுபுகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அரக்கோணம்

ஜாமீனில் வந்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாபாதர் தெருவை சார்ந்தவர் மணி.  இவரது மகன் கார்த்தி என்ற கார்த்திகேயன் (வயது 36). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் இவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கார்த்திகேயன் கடந்த 4-ந் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மதியம் காவனூர் ரோடு போலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது நண்பரின் வீட்டின் மாடியில் மது அருந்துவதற்காக சென்றுள்ளார். 
வெட்டிக்கொலை

அங்கு மது அருந்தி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து மாடியில் இருந்த கார்த்திகேயனை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் அங்கு சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
பழிக்குப்பழியாக நடந்ததா?

மேலும் பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததா, வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும், கார்த்திகேயனை கொலைசெய்த மர்ம கும்பல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஜாமீனில் வந்தவர் பட்டப்பகலில் வீடுபுகுந்து சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story