காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jun 2021 10:56 PM IST (Updated: 6 Jun 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த சில தினங்களாக தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த சில தினங்களாக தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டம்
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.616 கோடியில் திருச்சி முக்கொம்பில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களும் பயனடையும். முறையான பராமரிப்பு மற்றம் ஆய்வு இல்லாத காரணத்தினால் இந்த திட்டம் மக்களுக்கு பயனில்லாத வகையில் மாறிவிட்டது. 
அந்த அளவிற்கு தண்ணீர் வரும் குழாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்ட நிலையில் அதனை முறையாக பராமரிக்காமலும், மாற்று ஏற்பாடுகளை செய்யாமலும் கிடப்பில் போடப்பட்டதால் இந்த கூட்டு குடிநீர் திட்டம் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. இருப்பினும் ராமநாதபுரம் நகரின் சில பகுதிகளில் இந்த குடிநீர்தான் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தினமும் தண்ணீர் வராவிட்டாலும் வாரத்திற்கு 2 முறையாவது தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 7 தினங்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக இந்த தண்ணீரை நம்பி இருந்த மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வீணாகி வந்தது
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 
திருச்சியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் வழியில் திருப்பத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் குடிநீர் திட்ட மெயின் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயின் மேல்பகுதியில் தடுப்புச்சுவர் இருக்கும்படி மதகு பாலம் அமைத்துள்ளனர். இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனம் செல்லும் போது அதிக அழுத்தம் காரணமாக குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வந்தது. இந்த பழுதினை சரிசெய்து தண்ணீர் வினியோகம் செய்து வந்த போதிலும் அழுத்தம் கிடைக்காமல் போனதோடு தண்ணீர் வீணாகி வந்தது. இந்த சரிசெய்ய பாலத்தினை அகற்ற வேண்டும் என்பதால் அதற்கு மாற்றாக மதகுபாலத்தினை தோண்டாமல் அருகிலேயே மாற்றுப்பாதையில் 25 மீட்டர் நீளத்திற்கு புதிய இரும்பு குழாய் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் தண்ணீர் வினியோகம் சீராகி விடும். 
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதைதொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சி சார்பில் ஒரு சில பகுதிகளில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Next Story