கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு


கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:01 PM IST (Updated: 6 Jun 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்

ஊட்டி

கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். 

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி முதலிடத்தில் வர உள்ளது. தமிழகத்தில் 69 அரசு கொரோனா பரிசோதனை மையங்கள், 200 தனியார் ஆர்.டி.பி.சி.ஆர். மையங்கள் உள்ளது. கூடலூரில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். 

முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயன் அடைந்தவர்களை தொடர்பு கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்தி உள்ளீர்களா என்று விசாரிக்கப்படுகிறது.

921 பேருக்கு கருப்பு பூஞ்சை

தமிழகத்தில் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை 500 மெட்ரிக் டன். 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருக்கிறது. 921 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருப்பு பூஞ்சை தொற்று எவ்வாறு ஏற்படுகிறது, 

இதற்கு மாற்று சிகிச்சை, மாற்று மருந்து ஏதேனும் உள்ளதா போன்ற விவரங்களை அறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழு ஆராய்ந்த பின்னர் அறிக்கை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். 30,000 தடுப்பு மருந்து கேட்கப்பட்டு, 1,790 மருந்து வந்து உள்ளது.

ஒரு மாதத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், யோகா என 62 மையங்களில் இந்திய மருத்துவ முறை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டு உள்ளது. ஆய்வு பணிக்கு செல்லும் போது தனியார் மருத்துவமனைகளில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 

நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 68 பேர் பயனடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி ரத்து

மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா பாதித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க அங்கீகரிக்காத 19 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்த 5 தனியார் மையங்கள், அரசு நிர்ணயம் செய்ததை விட அதிக கட்டணம் வசூலித்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 10 தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. 2 ஆம்புலன்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

ஒரு கோடி தடுப்பூசி மருந்து

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்டை பார்வையிட்டு உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இது கடந்த 1907-ம் ஆண்டு வெறிநாய்க்கடி தடுப்பு மருந்து தயாரிக்க தொடங்கப்பட்டது. 

தற்போது 303 நிரந்தர பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி ஆகிய 3 நோய்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ரூ.137 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசி மருந்தை குப்பிகளில் நிரப்பும் திறன் உள்ளது. மூலப்பொருட்களை கலந்து நிரப்பி பேக்கிங் செய்ய வசதி இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் மூலப்பொருட்களை அனுப்பினால்,

குன்னூரில் இருந்து மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி மருந்தை குப்பிகளில் நிரப்பி தயார் செய்து பிற இடங்களுக்கு அனுப்ப முடியும். தற்போது கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் 2 நிறுவனங்களில் நிரப்பும் வசதி இல்லாததால் குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story