4-ல் 3 பங்கு கொரோனா பாதிப்பு கிராமங்களில் பதிவாகிறது காய்ச்சல் முகாம்களில் பங்கேற்க மக்கள் தயங்குவதால் மேலும் அதிகரிக்கும் அபாயம்


4-ல் 3 பங்கு கொரோனா பாதிப்பு கிராமங்களில் பதிவாகிறது காய்ச்சல் முகாம்களில் பங்கேற்க மக்கள் தயங்குவதால் மேலும் அதிகரிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:06 PM IST (Updated: 6 Jun 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 3 பங்கு அளவு கிராமங்களில் இருந்தே பதிவாகி வருகிறது. இந்த நிலையில் காய்ச்சல் முகாம்களில் பங்கேற்க மக்கள் தயங்குவது மேலும் தொற்று அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் சங்கிலி தொடர்போன்று பரவி வரும் கொரோனாவின் சங்கிலியை உடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம்  பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த வகையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வோர் முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இருப்பினும் முதல் அலையில் நகரங்களில் பாதிப்பை உண்டாக்கிய கொரேனா தற்போது கிராமங்கள் வரையில் சென்றுவிட்டது. இதனால் தொற்று கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மாவட்ட நிர்வாகத்துக்கு சவாலாகவே இருக்கிறது. 

13 ஒன்றியங்கள்

அதன்படி கடலூர் மாவட்டத்தில் அண்ணாகிராமம், கடலூர், புவனகிரி, கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் ஆகிய 13 ஒன்றியங்களில் கடந்த 4-ந் தேதி மட்டும் 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. 

 இதில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 488 ஆக இருந்தது. அதாவது 24 நாட்களுக்கு பிறகு அன்று தான் 500-க்கு கீழ் தொற்று குறைந்து இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.  கடந்த 10 நாட்களில் சராசரியாக குமராட்சியில் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி பகுதி

இதேபோல் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய 5 நகராட்சிகளில் கடந்த 4-ந்தேதி மட்டும்  105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடலூர் நகராட்சியில் 48 பேருக்கு பாதிப்பு உறுதியானது. சராசரியாக கடலூர் நகராட்சி பகுதியில் 57 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

 இதன் மூலம் மொத்த பாதிப்பில் 3 பங்கு கிராமப்புறங்களில் இருந்தே தற்போதைய நிலையில் கண்டறியப்பட்டு வருகிறது. எனவே  தொற்றின் சங்கிலியை தகர்த்தெறிய  கிராமங்கள் தோறும் சென்று காய்ச்சல் முகாம்களை நடத்தி அதில், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று இருக்கிறதா? இல்லையா ?என்பதை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

137 இடங்களில் காய்ச்சல் முகாம்

அதன்படி நேற்று கடலூர் ஒன்றியம் செம்மண்டலம் குறிஞ்சிநகரில் காய்ச்சல் முகாம் நடந்தது. இதை கண்காணிப்பு அலுவலர் உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆனால் மக்கள் அதிக அளவில் வரவில்லை. இதேபோல் மற்ற ஒன்றிய, நகராட்சி பகுதிகளில் 137 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முகாமில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டுமே வந்து பரிசோதனை செய்தனர். மற்றவர்கள் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டவில்லை.


இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது மக்களுக்காக தான் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். நீங்கள்தான் வெளியிடங்களுக்கு சென்று வருகிறீர்கள். உங்களால் தான் எங்களுக்கு நோய்த் தொற்று பரவும் நிலை ஏற்படும்.

வேதனை

ஆகவே நாங்களே வீட்டில் பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்ற கருவிகள் வைத்து பரிசோதனை செய்து கொள்கிறோம். தடுப்பூசி போடுவதாக இருந்தால் மட்டும் வெளியில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். மற்றபடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து கொள்ள காய்ச்சல் முகாமுக்கு வரமாட்டோம் என்று கூறி வருவது வேதனை அளிக்கிறது.


 மக்களை தேடி நாங்கள் வரும் போது, அதை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் சென்ற பிறகு கூட்டம் நிறைந்த மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிடும். 

Next Story