விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா போலீசாரை கண்டதும் 3 கிராம மக்கள் ஓட்டம்


விருத்தாசலம் அருகே  ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா  போலீசாரை கண்டதும் 3 கிராம மக்கள் ஓட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:16 PM IST (Updated: 6 Jun 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடந்தது. போலீசாரை கண்டதும் 3 கிராம மக்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. மழைக்காலத்தில்  இந்த ஏரி நிரம்பி வழிந்தது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணியை மேற்கொண்டனர். இதற்கிடையில் மன்னம்பாடி ஊராட்சி சார்பில், அந்த பெரிய ஏரியில் மீன் வளர்க்க குத்தகை விடப்பட்டது. 

இதனை குத்தகைக்கு எடுத்த நபர், அந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் இருந்தன. விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீரின் தேவை அதிகரித்ததாலும், கோடை வெயில் சுட்டெரித்ததாலும் ஏரியில் தண்ணீர் குறைந்து வந்தது. 

மீன்பிடி திருவிழா

எனவே ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க குத்தகைதாரர் திட்டமிட்டார். அற்காக ஏரியில் இருந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றி, மீன்களை பிடித்து, விற்பனை செய்து வந்தார். இதையடுத்து குத்தகைகாலம் முடிந்ததை அடுத்து நேற்று  ஏரியில் மீன்பிடி திருவிழா  நடந்தது.


அதன்படி மீன்களை பிடிக்க மன்னம்பாடி, படுகளாநத்தம், விளாங்காட்டூர் கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு வந்து போட்டி, போட்டு ஏரியில் மீன்பிடித்தனர். 

கிராம மக்கள் ஓட்டம் 

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது.

இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமயிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கிராம மக்கள், தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களுடன் நாலாபுறமும் ஓடினர். 

மேலும் எந்நேரத்திலும் பொதுமக்கள் மீன்பிடிக்க ஏரிக்குள் இறங்கலாம் என கருதி பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story