கைவினை பொருட்கள் விற்பனை பாதிப்பு


கைவினை பொருட்கள் விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:28 PM IST (Updated: 6 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகள் வராததால் கைவினை பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

சுற்றுலா பயணிகள் வராததால் கைவினை பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளது. 

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 2 நடமாடும் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு, பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. முழு ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வரவில்லை.

பொருட்கள் தேக்கம்

இதனால் 2 வாகனங்களில் கைவினை பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஊட்டி சாக்லேட், தேயிலைத்தூள், வாசனை திரவிய பொருட்கள், மூலிகை சோப்புகள், கம்பிளி ஆடைகள், யூக்கலிப்டஸ் தைலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வழக்கமாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருவதால் வாகனங்களில் விற்பனைக்கு வைத்திருக்கும் பொருட்கள் அதிகமாக விற்பனை ஆகும். 

இந்த ஆண்டு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் நடமாடும் வாகனங்கள்  மூலம் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடும் பாதிப்பு

தற்போது நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மகளிர் சுய உதவிக்குழுவினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினை பொருட்களை வாங்கி நடமாடும் வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

முழு ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் இல்லாததால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டு சுற்றுலா தலங்கள் திறந்து செயல்பட்டால் தான் பழைய நிலை திரும்பும் என்றார்.


Next Story