திருச்சியில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் ஒப்படைப்பு
திருச்சியில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் ஒப்படைக்கப்படுகிறது.
திருச்சி,
திருச்சியில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் ஒப்படைக்கப்படுகிறது.
பறிமுதல் வாகனங்கள் ஒப்படைப்பு
திருச்சி மாநகரில் கடந்த 15-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 6,610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 871 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் திருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தேதிவாரியாக தினந்தோறும் தகுந்த நேர இடைவெளியில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 250 வாகனங்கள் வீதம் இன்று (திங்கட்கிழமை) முதல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இவ்வாறு வாகனங்கள் விடுவிக்கப்படும்போது, சுழற்சி முறையில் 2 உதவி கமிஷனர்கள் தலைமையிலான 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுக்களின் மூலம் நேரடி மேற்பார்வையில் வாகனங்கள் விடுவிக்கப்படும்.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் 9 மணி வரை கண்டோன்மெண்ட் சரகத்திற்குட்பட்ட 50 வாகனங்களும், 9 மணி முதல் 11 மணி வரை பொன்மலை சரகத்திற்குட்பட்ட 50 வாகனங்களும், 11 மணி முதல் 1 மணி வரை கோட்டை சரகத்திற்குட்பட்ட வாகனங்களும், பகல் 2 மணி முதல் 4 மணிவரை போக்குவரத்துக்கு சரகங்களுக்குட்பட்ட வாகனங்களும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீரங்கம் சரகத்திற்குட்பட்ட வாகனங்களும் விடுவிக்கப்படுகிறது.
உரிய ஆவணங்கள்
வாகனம் விடுவிக்கும் தேதி மற்றும் நேரத்தை முந்தைய தினமே வாகன உரிமையாளர்கள் அல்லது வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இதனை பொறுப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் போது வழங்கப்பட்ட போலீஸ் நோட்டீஸின் நகல் மற்றும் வாகனங்களுக்கு உரிய அசல் ஆவணங்களை அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது உரிமையாளரால் அங்கீகார கடிதம் வழங்கப்பட்ட நபர் எடுத்து வர வேண்டும்.
அவ்வாறு வரும் நபர் அவரது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரவேண்டும். இவ்வாறு வருபவர்களிடம் மட்டுமே வாகனங்கள் ஒப்படைக்கப்படும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது மற்றும் இதர சில போக்குவரத்து விதிமீறல்களால் வாகனம் ஓட்டி வந்தது போன்ற குற்றத்திற்காக கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு உரிய அபராதம் நேரிலோ அல்லது நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டதை உறுதி செய்த பிறகுதான் அத்தகைய வாகனங்கள் விடுவிக்கப்படும்.
உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் அந்த வாகனங்கள் உரிமை கோரப்படாத வாகனங்களாக கருதி குற்றவியல் முறை சட்டம் 102-ன் படி வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை விடுவிக்கும் முன்னர் அந்த வாகனங்களின் பதிவு எண்ணை சி.சி.டி.என்.எஸ். மூலம் ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களா? என கண்டறிந்து அதை உறுதி செய்த பின்னர்தான் வாகனங்கள் விடுவிக்கப்படும்.
இந்த தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story