காவிரி ஆற்றுப்படுகையில் போடப்பட்டிருந்த 500 லிட்டர் சாராய ஊறல்கள் பறிமுதல்


காவிரி ஆற்றுப்படுகையில் போடப்பட்டிருந்த 500 லிட்டர் சாராய  ஊறல்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:41 PM IST (Updated: 6 Jun 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே காவிரி ஆற்றுப்படுகையில் போடப்பட்டிருந்த 500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

நொய்யல்
போலீசார் சோதனை
கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதி காவிரி ஆற்றுப்படுகையில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக மண்பானை மற்றும் பேரல்களில் ஊறல் போட்டிருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கரூர் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் தனிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், செந்தில்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கிழக்கு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்படுகையில் நெடுகிலும் சோதனை செய்தனர். 
 ஊறல்கள் பறிமுதல்
அப்போது காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள செடிகள் முளைத்திருக்கும் பகுதிக்குள் பானைகள் மற்றும் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 500 லிட்டர் ஊறல் போட்டிருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் சாராய ஊறல் இருந்த பானைகள் மற்றும் பேரல்களை வெளியே எடுத்து ஊறல்களை கீழே கவிழ்த்து அழித்தனர். பின்னர் ஊறல் பானைகள் மற்றும் பேரல்களை பறிமுதல் செய்தனர். 
2 பேர் கைது
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, கிழக்கு தவுட்டுப் பாளையத்தை சேர்ந்த சசிகுமார் (35), அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (30), அஜித் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து காவிரி ஆற்றுப்படுகையில் கள்ளச் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு இருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களை தேடி வீடுகளுக்கு சென்றனர். 
அப்போது வீட்டில் இருந்த கண்ணன், அஜித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சசிக்குமாரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story