தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் கடைசி நாள்: நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடின


தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் கடைசி நாள்: நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 6 Jun 2021 11:43 PM IST (Updated: 6 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் கடைசி நாள்: நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடின

நாமக்கல்:
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் கடைசி நாளில் நாமக்கல்லில் உள்ள சாலைகள் வெறிச்சோடின.
போலீசார் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மருந்து கடைகளை தவிர அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது.
தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கின் கடைசி நாளான நேற்று நாமக்கல் நகரில் சேலம் சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை, சேந்தமங்கலம் சாலை, திருச்செங்கோடு சாலை என அனைத்து சாலைகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
30 சதவீத பணியாளர்கள்
இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடங்கியது. அதிலும் சேலம், நாமக்கல் உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும் எனவும், அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story