நோய் எதிர்ப்பு மருந்து பெட்டகம் வினியோகம்


நோய் எதிர்ப்பு மருந்து பெட்டகம் வினியோகம்
x
தினத்தந்தி 6 Jun 2021 11:50 PM IST (Updated: 6 Jun 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஊட்டி,

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று உறுதியான நபர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 800-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இங்கு வசிப்பவர்கள் 14 நாட்கள் வெளியே வரக்கூடாது. வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இதை மீறும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மருந்து பெட்டகம்

லேசான அறிகுறியுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா, ஆக்சிஜன் அவசியமா என்று கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஊழியர்கள் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து
அதன்படி தொற்று குணமாகிய 18 வயது உட்பட்டவர்களுக்கு உடல் நலத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், ராகி மாவு, தேன், நெய், நாட்டு சர்க்கரை போன்ற 12 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

தொற்றில் இருந்து மீண்டு வந்த கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு வைட்டமின் சி 500 மில்லி கிராம், பல்ஸ் ஆக்சி மீட்டர், கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது.

மேலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மருந்து பெட்டகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story