பரப்பாடி அருகே இருதரப்பினர் மோதல்; 15 பேர் மீது வழக்கு


பரப்பாடி அருகே இருதரப்பினர் மோதல்; 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Jun 2021 1:02 AM IST (Updated: 7 Jun 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

பரப்பாடி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்டமொழி, ஜூன்:
பரப்பாடி அருகே  இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றபோது...

பரப்பாடி அருகே வடக்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் சுடலை மகன் இசக்கிலிங்கம் (வயது 21). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மற்றொரு தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அங்குள்ள இசக்கிதாஸ் (25) என்பவரது வீட்டின் மீது கழிவுநீர் தெறித்தது. இதுதொடர்பாக இசக்கிலிங்கத்தை கண்டித்த இசக்கிதாஸ், தங்களது தெருவின் வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினர் மோதல்

பின்னர் அங்கிருந்து சென்ற இசக்கிலிங்கம் தன்னுடைய அண்ணன்களான சதீஷ் (30), முருகன் (29) மற்றும் உறவினர்களுடன் மீண்டும் இசக்கிதாசின் வீட்டுக்கு சென்றார். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் சதீஷ், முருகன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவ இடத்தை நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிஷா ஸ்டெபல்லா தெரஸ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

15 பேர் மீது வழக்கு

இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் இசக்கிலிங்கம் அளித்த புகாரின்பேரில், இசக்கிதாஸ், கோபால், பேச்சிமுத்து, சுடலைவேல், வேம்புதாஸ், இசக்கி, மற்றொரு பேச்சிமுத்து, முத்துகுமார், தாஸ் ஆகிய 9 பேர் மீதும், இசக்கிதாஸ் அளித்த புகாரின்பேரில், இசக்கிலிங்கம், சதீஷ், முருகன், மற்றொரு முத்துகுமார், மகேஷ், மணி ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story