குமரியில் 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்


குமரியில் 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Jun 2021 1:33 AM IST (Updated: 7 Jun 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்பூசி தட்டுப்பாடு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால் தினமும் தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
திடீர் போராட்டம்
இதற்கிடையே நேற்று காலையில் தடுப்பூசி போடுவதற்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானவர்கள் அதிகாலையிலேயே திரண்டனர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு வந்து தடுப்பூசி போட மருந்து இல்லை. எனவே தடுப்பூசி மருந்து வந்த பிறகு தான் போடப்படும் என்று கூறினார்கள்.இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென தடுப்பூசி தட்டுப்பாட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு வந்த 14 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 2 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் முழுவதுமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டன. புதிதாக தடுப்பூசி டோஸ்கள் வரவில்லை. இதனால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது என தெரிவித்தனர். 

Next Story