குமரியில் புதிதாக 490 பேருக்கு கொரோனா


குமரியில் புதிதாக  490 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Jun 2021 1:38 AM IST (Updated: 7 Jun 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் புதிதாக 490 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 12 பேர் பலியாகி உள்ளனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் புதிதாக 490 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 12 பேர் பலியாகி உள்ளனர்.
490 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. ஆயிரத்துக்கு மேலே சென்ற பாதிப்பு கடந்த சில தினங்களாக 700-க்கு கீழ் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பாதிப்பு 500-க்கும் கீழ் சென்றது. அதாவது நேற்று முன்தினம் 490 பேர் பாதிக்கப்பட்டனர். 
இதில் நாகர்கோவிலில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதே போல அகஸ்தீஸ்வரம்-43, கிள்ளியூர்-33, குருந்தன்கோடு-68, மேல்புறம்-50, முன்சிறை-14, ராஜாக்கமங்கலம்-35, திருவட்டார்-58, தோவாளை-38 மற்றும் தக்கலையில் 57 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
மேலும் திருநெல்வேலியில் இருந்து வந்த 3 பேருக்கும், கேரளா மற்றும் கூடலூரில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், விருதுநகரில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்களில் நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும், தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது.
12 பேர் பலி
நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பகுதியிலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் 40-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தது. தற்போது பத்துக்கு மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் தினமும் கண்காணித்து வருகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினசரி பாதிப்பு குறைய தொடங்கினாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து 10-ஐ தாண்டியே உள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதனால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,036 ஆக உயர்ந்துள்ளது.

Next Story