சேலம் அருகே இரும்பாலையில் ஆக்சிஜன் படுக்கை வசதி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
சேலம் அருகே இரும்பாலையில் கூடுதல் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் அருகே இரும்பாலையில் கூடுதல் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆக்சிஜன் படுக்கை வசதிகள்
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி இரும்பாலை வளாகத்தில் மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் அங்கு 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி இரவு, பகலாக முழுவீச்சில் நடந்து வருகிறது.
அமைச்சர் ஆய்வு
இந்த பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கும் பணியை விரைந்து முடித்து கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story