தூத்துக்குடியில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது
தூத்துக்குடியில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. காய்கறி, பலசரக்கு, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.
கொரோனா வைரஸ்
தமிழகம் முழுவதும் கொரேனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வு இல்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து உள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மளிகை, காய்கறி கடைகள், ஒர்க்ஷாப்கள் திறக்க அனுமதி அளித்தது.
காய்கறி கடைகள்
அதன்படி நேற்று காலையில் வழக்கம் போல் காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி சென்றனர். ஆனால் பெரிய அளவில் கூட்டம் இல்லை. பல கடைகளில் ஆளே இல்லாத நிலை நீடித்தது. மீன்கடைகள், இறைச்சி கடைகளும் நேற்று காலையில் திறக்கப்பட்டன. பல மீனவ கிராமங்களில் மக்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அதிக விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மீன் வாங்க குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வந்திருந்தனர்.
ஆட்டோ
மேலும் ஆட்டோ, வாடகை கார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், நேற்று பல ஆட்டோக்கள் இயங்கின. இதில் பொதுமக்கள் உரிய கொரோனா விதிமுறையை பின்பற்றி 2 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அதே போன்று சரக்கு லாரிகள், இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்வோரும் அதிக அளவில் பயணம் செய்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது போன்று, அனைத்து பக்கங்களிலும் மக்களின் நடமாட்டம் தென்பட்டது.
Related Tags :
Next Story