விளாத்திகுளம் அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாருக்கு தகவல்
விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை கிராம பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் அறிவுறுத்தலின்படி விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் விளாத்திகுளம் ஆற்றங்கரை கிராமப்பகுதியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் தலைமையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை போலீசார் சோதனை நடத்தினர். அதில் 50 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் வாகனத்தை ஓட்டிவந்த மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (வயது33), சாயல்குடியை சேர்ந்த சண்முகம் (வயது51), மற்றும் சாயல்குடியை சேர்ந்த முனியசாமி (வயது66) ஆகியோர் கடத்தியது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து 40 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story