நாகை அருகே 250 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்


நாகை அருகே 250 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jun 2021 8:35 PM IST (Updated: 7 Jun 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் முன்பே அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு தற்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி வருகின்றனர். இந்த நிலையில் நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூரில் சாராயம் காய்ச்சப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டர் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வடக்கு பொய்கைநல்லூர் பனை தோப்பில் பூமிக்கு அடியில் 3 பேரல்களில் 250 லிட்டர் சாராய ஊறல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அதை தரையில் ஊற்றி அழித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்கிற ராஜா (வயது 31), மகேஸ்வரன் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story