எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட உத்தரவு பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட கட்சி மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மேலிடம் விரும்பினால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சுமார் 14 மாதங்கள் அவர் பதவியில் இருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு 75 வயது கடந்துவிட்டதால், அவரை முதல்-மந்திரி ஆக்குவதில் பா.ஜனதா மேலிடம் சற்று தயக்கம் காட்டியது.
ஆனால் பா.ஜனதாவில் பலம் வாய்ந்த வேறு தலைவர்கள் இல்லாத காரணத்தால், வயது உச்சவரம்பு தொடர்பான கட்சி விதிகளை தளர்த்தி எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அக்கட்சியில் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் 75 வயதை கடந்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று அடுத்த மாதத்துடன் 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால், அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமனம் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் பா.ஜனதா மேலிடம் உள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர் உள்ளிட்ட சிலர், எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதை கட்சியின் வேறு சில எம்.எல்.ஏ.க்களும் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடியூரப்பாவுக்கு எதிரான மனநிலை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிடுமாறு கோரி பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு கடிதம் அனுப்பினர். அதன் அடிப்படையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டும்படி எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பாக தகவல் வெளியாகும் போதெல்லாம் அதற்கு பதிலளித்த எடியூரப்பா, பதவி காலம் முழுமைக்கும் நானே முதல்-மந்திரியாக இருப்பேன் என்று பதில் கூறி வந்தார். தற்போது ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக எடியூரப்பா, பா.ஜனதா மேலிடம் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“எங்கள் கட்சி மேலிடத்திற்கு எதுவரை என் மீது நம்பிக்கை உள்ளதோ அதுவரை நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன். நான் வேண்டாம் என்று பா.ஜனதா மேலிடம் விரும்பினால், உடனே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன். அதன் பிறகு மாநில வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன். நான் எந்த குழப்பத்திலும் இல்லை.
எனக்கு பா.ஜனதா மேலிடம் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். நான் யாரையும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. எனக்கு மாற்றாக வேறு தலைவர்கள் இல்லை என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
தேசிய அளவில் ஆகட்டும், மாநில அளவில் ஆகட்டும், மாற்று தலைவர்கள் இருக்கிறார்கள். எங்கள் கட்சி மேலிடத்தின் ஆதரவு இருக்கும் வரை நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன்.” இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story