2 நாட்களாக தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
2 நாட்களாக தடுப்பூசி போடவில்லை
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்தது. முதலில் பொதுமக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் அதிகரித்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்திற்கு வருகிற தடுப்பூசிகள் அனைத்தும் விறு, விறுவென காலியாகி வந்தன. இதற்கிடையே மாவட்டத்தில் பல இடங்களில் போடப்பட்டு வந்த தடுப்பூசி குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே கடந்த சில வாரங்களாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மாநகரில் எந்த பகுதியிலும் தடுப்பூசி போடவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தடுப்பூசி இல்லை
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி மாவட்டத்திற்கு வர வர அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி இருப்பும் இல்லை. ஏற்கனவே வந்த தடுப்பூசிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டன.
இதனால் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாவட்டத்திற்கு தடுப்பூசி வரவில்லை. இருப்பும் இல்லை என்பதால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி வந்தவுடன் அனைவருக்கும் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
------
Related Tags :
Next Story