காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்படத் தொடங்கின


காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்படத் தொடங்கின
x
தினத்தந்தி 7 Jun 2021 9:37 PM IST (Updated: 7 Jun 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 2 வாரத்திற்குப் பிறகு காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. காய்கறி மார்க்கெட்டுகளும் திறக்கப்பட்டன.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 2 வாரத்திற்குப் பிறகு காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. காய்கறி மார்க்கெட்டுகளும் திறக்கப்பட்டன.
தளர்வுகள் அறிவிப்பு
கொரோனா 2-வது அலையால் நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டது. மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகனங்கள் மூலமே காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் முழு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நோய் பாதிப்பு கடுமையாக அதிகரித்த நிலையில் குறிப்பிட்ட சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
மளிகைக் கடைகள்
அதன்படி திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி விற்பனை செய்யும் கடைகள், மீன் கடைகள் நேற்று காலை முதல் திறந்து செயல்பட்டன. மளிகை கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.
அதுபோல் காய்கறி கடைகளிலும் பொதுமக்கள் வந்து வாங்கி சென்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல் மளிகை, காய்கறி கடைகள், மீன், இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டன. பெட்டி கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
சந்தைகள்
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன. மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
சமூக இடைவெளியை கடைபிடித்து ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்தவெளியில் சந்தைகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட், பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் நேற்று செயல்படத் தொடங்கின. மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
அரசு அலுவலகங்கள்
அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்களுடன் பணி நடைபெற்றது. அதுபோல் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற் கொள்ளப்பட்டது.
அதுபோல் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின.
வாகனப் போக்குவரத்து அதிகம்
இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் நேற்று மளிகை, காய்கறி கடைகள், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டதால் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

Next Story