10 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க தொடங்கின
திருப்பூரில் 10 சதவீத தொழிலாளர்களுடன் நேற்று பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க தொடங்கின. இதனால் தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூரில் 10 சதவீத தொழிலாளர்களுடன் நேற்று பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க தொடங்கின. இதனால் தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏற்றுமதி நிறுவனங்கள்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. முதலில் தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்தது. திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து திருப்பூரில் அதிகரித்து வந்ததால் பனியன் நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வந்தது.
10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கின
இதற்கிடையே தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதிப்பு அதிகம் மற்றும் குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு சில கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கான ஆணை இருந்தால், ஏற்றுமதிக்கான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவீத தொழிலாளர்களுடன் அரசு வழிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் நேற்று செயல்பட தொடங்கின. முன்னதாக நிறுவனங்களுக்கு வந்த தொழிலாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுபோல் அனைவரும் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியுடனும் நேற்று தொழிலாளர்கள் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டனர்.
மகிழ்ச்சி
இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஒடிசாவை சேர்ந்த ரீனா:-
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லாமல் இருந்தது. இதனால் வேலையின்றி வீடுகளில் இருந்து வந்தோம். சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமலும் இருந்து வந்தோம். இந்தநிலையில் தற்போது ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக எங்களுக்கு வேலையும் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளோம் .
மேற்கு வங்கத்தை சேர்ந்த ஷோபனா:-
கடந்த மாதம் 14-ந் தேதி முதல் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக கடும் சிரமத்தை சந்தித்து வந்தோம். உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு என வைத்திருந்த பணம் அனைத்தும் செலவான நிலையில் கஷ்டமான சூழல் இருந்து வந்தது. தற்போது பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கியது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் செய்கிற வேலைக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும். எங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வாங்க முடியும்
பணக்கஷ்டம்
ஒடிசாவை சேர்ந்த துரியோதனன்:-
ஊரடங்கின் போது நிறுவனங்கள் இயங்காததால் செலவுக்கு கூட பணம் இல்லை. இதன் காரணமாக உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வந்தோம். மற்ற தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஆனால் எங்களால் சொந்த ஊர்களுக்கு கூட செல்ல முடியவில்லை. இதனால் பனியன் நிறுவனங்கள் எப்போது இயங்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம்.
அதன்படி தற்போது இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு இனிமேல் பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story