கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள் ‘தடுப்பூசி போட்டு சாகடிக்க பார்க்கிறீர்களா?’ என பெண் ஆவேசம்


கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள் ‘தடுப்பூசி போட்டு சாகடிக்க பார்க்கிறீர்களா?’ என பெண் ஆவேசம்
x
தினத்தந்தி 7 Jun 2021 4:21 PM GMT (Updated: 7 Jun 2021 4:21 PM GMT)

பீதர் அருகே வீடு, வீடாக சென்று அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஒரு பெண், ‘தடுப்பூசி போட்டு சாகடிக்க பார்க்கிறீர்களா ? ’ என அதிகாரிகளை பார்த்து ஆவேசமாக கேட்டார்.

பீதர், 

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்தது. ஊரடங்கு உள்ளிட்ட மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மேலும் மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. 2-வது அலை கிராமப்புறங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்க விளைவு ஏற்படுவதாகவும், சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கிராமப்புறங்களில் வதந்தி பரவி வருகின்றன.

இந்த நிலையில் பீதர் மாவட்டம் பால்கி தாலுகா தாளவாடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பால்கி தாசில்தார் மனோகர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், வீடு, வீடாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினர். மேலும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பாகம்மா என்பவர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்ததுடன், அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினார். அப்போது அவர், ‘சிறிய நிலத்தை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் கொரோனா தடுப்பூசியை போட்டு எங்களை சாகடிக்க பார்க்கிறீர்களா? என கேட்டார்.

இதனை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தியை பரப்பப்படுவதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறினார்கள். ஆனாலும் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து வீட்டுக்குள் சென்று கதவைபூட்டிக் கொண்டார்.

Next Story