வால்பாறை எஸ்டேட் பகுதியில் பள்ளிக்கூட சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்


வால்பாறை எஸ்டேட் பகுதியில் பள்ளிக்கூட சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
x

வால்பாறை எஸ்டேட் பகுதியில் பள்ளிக்கூட சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

வால்பாறை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் பள்ளிக்கூட சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் கோடைகாலம் தொடங்கியதால் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றன. இந்த நிலையில் ஒரு சில யானைகள் கூட்டம் தொடர்ந்து வால்பாறை எஸ்டேட் பகுதியில் சுற்றி வருகின்றன. கடந்த 4-ந் தேதி வாட்டர்பால் எஸ்டேட் பகுதியில் காவலாளி ஒருவரை காட்டு யானை மிதித்து கொன்றது. 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் 3 குட்டிகள் உள்பட 7 காட்டு யானைகள் லோயர்பாரளை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. 

பள்ளிக்கூட சுவர் சேதம்

தொடர்ந்து அந்த காட்டு யானைகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுசுவர், கேட்டை உடைத்து உள்ளே சென்றன. பின்பு சத்துணவு மையத்தின் ஜன்னலை உடைத்து அரிசி, பருப்புகளை எடுத்து தின்றும், வெளியே வீசியும் அட்டகாசம் செய்தன. 

சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள், காட்டு யானைகள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து வால்பாறை வனச்சரகத்தின் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு அதிரடி படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். 

அதற்குள் காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட முயன்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். உடனடியாக வனத்துறையினர் ஒலி எழுப்பி காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் பீதியடைந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவனமாக இருக்க வேண்டும்

தொடர்ந்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானைகள் தொடர்ந்து லோயர்பாரளை, பாறைமேடு, பூத்தோட்டம் ஆகிய எஸ்டேட் பகுதிகளை சுற்றியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

 குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் தனியாக செல்லக்கூடாது. 

காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தால் வனப்பகுதியையொட்டி உள்ள தேயிலை தோட்டத்திற்கு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

Next Story