நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து பெண் படுகொலை தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு


நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து பெண் படுகொலை தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2021 10:07 PM IST (Updated: 7 Jun 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

துமகூரு, 

துமகூரு மாவட்டம் கோரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோரேகுன்டே கிராமத்தை சேர்ந்தவர் தாராநாத். இவர், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். தற்போது அவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். தாராநாத்திற்கு, சோரேகுன்டே கிராமத்தில் தோட்டமும், வீடும் உள்ளது. அந்த தோட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த அனுமந்தராயப்பா, அவரது மனைவி ஜெயம்மா (வயது 45) வேலை பார்த்து வந்தனர். தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே தம்பதி வசித்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 4-ந் தேதி அனுமந்தராயப்பாவின் குழந்தை, உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது வீடு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதுபற்றி அறிந்த தாராநாத் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்கதவு உட்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. அதே நேரத்தில் அனுமந்தராயப்பா, அவரது மனைவி ஜெயம்மாவும் தோட்டத்தில் இல்லாமல் இருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த தாராநாத் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது ரத்த வெள்ளத்தில் ஜெயம்மா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது ஜெயம்மாவின் தலை மற்றும் உடல் தனியாக இருந்தது. ஜெயம்மாவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் கோரா போலீசார் விரைந்து சென்று ஜெயம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கடந்த 4 ஆண்டுகளாக தாராநாத்தின் தோட்டத்து வீட்டில் தம்பதி வசித்து வந்தது தெரிந்தது.

ஜெயம்மாவின் நடத்தையில் அனுமந்தராயப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஜெயம்மாவின் கழுத்தை அறுத்து அனுமந்தராயப்பா கொலை செய்ததுடன், வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கோரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட அனுமந்தராயப்பாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story