ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் உலா வந்த வாகனங்கள்


ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் உலா வந்த வாகனங்கள்
x
தினத்தந்தி 7 Jun 2021 10:10 PM IST (Updated: 7 Jun 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக, தேனி நகரில் ஏராளமான வாகனங்கள் உலா வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் களை கட்டியது.

தேனி:

தளர்வுகளுடன் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 24-ந்தேதி தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பலனாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்தது. 

இந்தநிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. 

காய்கறி, மளிகை கடைகள், பலசரக்கு மொத்த விற்பனை கடைகள், செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள் போன்றவை திறக்கப்பட்டன. 

பழக்கடைகள், பூக்கடைகள் போன்றவையும் திறக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டன. பேக்கரி கடைகளில் பெரும்பாலும் கடைக்கு முன்பு மேஜையில் பொருட்களை அடுக்கி விற்பனை செய்தனர்.

களை கட்டிய கடை வீதிகள்

2 வார இடைவெளிக்கு பிறகு காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டதால் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். தேனி நகரில் உள்ள கடை வீதிகள் களை கட்டியது.

 தேனி நகரை பொறுத்தவரை குடியிருப்புகளில் ஏராளமான மளிகை கடைகள் உள்ளன. இதனால், பெரும்பாலான மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலேயே பொருட்களை வாங்கிக் கொண்டனர். கடைவீதிகளுக்கு வந்தும் பலர் பொருட்கள் வாங்கினர். 

குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் தங்களின் வணிகத்துக்கு பொருட்கள் வாங்குவதற்காக தேனியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் குவிந்தனர்.

தேனி நகரில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஏராளமானோர் வாகனங்களில் உலா வந்தனர். 

இதனால் மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை ஆகிய சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

 மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், கடைவீதிகளில் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தனர். இது கொரோனா பரவலை மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.

Next Story