கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்வு
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்ந்தது.
உத்தமபாளையம்:
கம்பம் பள்ளத்தாக்குப்பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்துக்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
திராட்சை விவசாயத்துக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை, மண் வளம் ஆகியவை கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் இங்கு கருப்பு பன்னீர் திராட்சை அறுவடை நடப்பது கூடுதல் சிறப்பு.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கடும் கிராக்கி உள்ளது.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தின் பிடியில் கருப்பு திராட்சையும் சிக்கி சின்னா பின்னமாகி விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து திராட்சை பழங்களை வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியவில்லை. இதனால் ஒரு கிலோ திராட்சை பழம் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால் திராட்சை பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு வருகின்றனர்.
இதனால் திராட்சை பழங்களின் விலை ஏறுமுகமாக உள்ளது. தற்போது, ஒரு கிலோ திராட்சை பழத்தை ரூ.35-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். திராட்சை பழங்களுக்கு ஓரளவு விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story