மைசூருவில் மோதல் எதிரொலி: 2 பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம் கர்நாடக அரசு உத்தரவு
மைசூருவில் மோதல் எதிரொலியாக 2 பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
மைசூரு மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் ஷில்பா நாக். இவருக்கும் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த மோதல் விவகாரம் கடந்த சில தினங்களுக்கு பகிரங்கமானது. அதாவது, மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தனது அதிகாரத்தில் தலையிடுவதாகவும், அதனால் மனம் நொந்து பணியை ராஜினாமா செய்துள்ளதாகவும் ஷில்பா நாக் கூறினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார்.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இந்த மோதல் போக்கு கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் அரசு மவுனம் வகிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். மாநகராட்சி கமிஷனர் ஷில்பா நாக், கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.12 கோடி செலவு செய்தது குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தான் அதுகுறித்து கேள்வி எழுப்பியதால், தனக்கு எதிராக குற்றம்சாட்டுவதாக கலெக்டர் ரோகிணி சிந்தூரி கூறினார்.
பதிலுக்கு ஷில்பா நாக், கலெக்டர் ரோகிணி சிந்தூரி ரூ.42 கோடி முறைகேடு செய்துள்ளதாக பரபரப்பு குற்றம்சாட்டினார். பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இந்த மோதல் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் கர்நாடக அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த 2 பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் கர்நாடக அரசு திடீரென அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதாவது மைசூரு கலெக்டர் ரோகிணி சிந்தூரி, இந்து அறநிலையத்துறை கமிஷனராகவும், மாநகராட்சி கமிஷனர் ஷில்பா நாக், பெங்களூருவில் உள்ள அரசின் மின் ஆட்சி நிர்வாகத்துறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணி இடமாற்றம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த ரோகிணி சிந்தூரி, உடனடியாக நேற்று காலை பெங்களூரு வந்து, முதல்-மந்திரி எடியூரப்பாவை காவேரி இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அப்போது ரோகிணி சிந்தூரி, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதனால் தனது பணி இடமாற்ற உத்தரவை வாபஸ் பெறுமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால் எடியூரப்பா அவரது கோரிக்கையை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ரோகிணி சிந்தூரி
கடந்த மே மாதம் 3-ந் தேதி சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தனர். ரோகிணி சிந்தூரி, மைசூருவில் இருந்து ஆக்சிஜன் அனுப்ப தடை விதித்ததால் தான் இந்த சம்பவம் நேரிட்டதாக சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இதனால் அப்போதே அவர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கர்நாடக சட்ட ஆணைய நீதிபதிகள் நடத்திய விசாரணையில், இதில் ரோகிணி சிந்தூரி எந்த தவறும் செய்ய வில்லை என்று கூறியது. இதனால் அந்த சம்பவத்தில் ரோகிணி சிந்தூரிக்கு நற்சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத் தக்கது.
ரோகிணி சிந்தூரி அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறார். இதற்கு முன்பு, காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, ரோகிணி சிந்தூரி ஹாசன் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போதும், அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த எச்.டி.ரேவண்ணாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு, அவர் தனது அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story