மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 1680 மதுபாட்டில்கள் பறிமுதல்


மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 1680 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து மினி லாரியில் தக்காளிப்பழ பெட்டிகளுக்கு அடியில் வைத்து கடத்தி வரப்பட்ட 1,680 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

திருக்கோவிலூர்

வாகன சோதனை

திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் உத்தரவின்பேரில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸ்காரர்கள் பார்த்தசாரதி, சத்யராஜ், ஊர்க்காவல் படையை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் நேற்று அதிகாலை 2 மணியளவில் டீ கீரனூர்-மண்டபம் நான்கு முனை ரோடு சந்திப்பு அருகே தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கர்நாடக மாநில மதுபாட்டில்கள்

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உள்ளே தக்காளிப்பெட்டிகளுக்கு அடியில் ஏராளமான அட்டைப்பெட்டிகள் இருந்தன. அதில் ஒரு பெட்டியை போலீசார் பிரித்து பார்த்தபோது கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 
மொத்தம் 35 பெட்டிகளில் 180 மில்லி அளவுள்ள 1,680 மதுபாட்டில்கள் இருந்தன. இவற்றை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து லாரி டிரைவர் பெங்களூரு, கே.எஸ்.கார்டன், லால்பாக், 3-வது தெருவைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் சரத்(வயது 28), செஞ்சி குளத்தங்கரை தெரு முனுசாமி மகன் விஜய்(21) மற்றும் வேங்கூர் வீரன் கோவில் பாண்டுரங்கன் மகன் சரவணன்(32) ஆகியோரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களுடன் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.

Next Story